மதுரையில் நடைபெற்ற பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு, 2026 தமிழக சட்டசபை தேர்தல் குறித்து உறுதியுடன் பேசியுள்ளார். “2025ல் டெல்லியில் பாஜக எப்படி ஆட்சியை பிடித்ததோ, அதேபோன்று 2026ல் தமிழகத்திலும் பாஜக ஆட்சி மலரும். தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி” என அவர் உறுதிபடக் கூறினார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின், பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, பின்னர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். ஒடிசா, ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுள்ளது. டெல்லியிலும் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைந்தது என்பதை அமித்ஷா முக்கியமாக எடுத்துரைத்தார்.
திமுக அரசை அவர் கடுமையாக விமர்சித்தார். “திமுக ஊழல் ஆட்சி நடத்தி வருகிறது. மத்திய அரசின் நிதி உதவிகள் மக்களுக்குச் செல்லாமல் தடுக்கப்படுகின்றன. டாஸ்மாக் ஊழல் ரூ.35,775 கோடிக்கு மேல் சென்றுள்ளது. வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றாத அரசு, நூற்றுக்கு நூறு தோல்வியடைந்ததாகவே கருதப்படுகிறது” என தெரிவித்தார்.
மக்களிடையே வாழ்வாதார பிரச்சனைகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு போன்றவை நாளுக்கு நாள் மோசமடையும் நிலையில் உள்ளன என்றும், இளைஞர்கள் துன்பத்தில் தவிக்கும் சூழலில் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், “பிரிவினை வாதம் மற்றும் ஜாதி அரசியலால் தென்தமிழகத்தில் திமுக லாபம் பார்க்கிறது. கள்ளச்சாராயத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர்” என அவர் தெரிவித்தார். இதற்குப் பதிலாக, மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது என்றும், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் $4.19 டிரில்லியனாக வளர்ந்துள்ளதாகவும் கூறினார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு ₹1.53 லட்சம் கோடி வழங்கப்பட்டதைக் காட்டிலும் மோடி ஆட்சியில் ₹6.80 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சாலை வளர்ச்சிக்கு ₹63,000 கோடி, கட்டுமானத்துக்கு ₹73,000 கோடி, விமான நிலைய வளர்ச்சிக்கு ₹3,000 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் அமித்ஷா எடுத்துரைத்தார்.
2026 தேர்தலுக்கு பாஜக உறுதியுடன் தயாராகி வருகிறது என்பதையும், மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகவும் அவர் வலியுறுத்தினார்.