தஞ்சாவூர்: எங்கள் இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி தாலுகா, கூத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மகாராணி (70). இவரது கணவர் முத்துக்குமரன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் பந்தளராஜா மாற்றுத்திறனாளி.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பூதலூர் தாலுகாவில் எங்களுக்கு சொந்தமாக 13 சென்ட் உள்ளது. இந்த சொத்து எனது கணவர் மூலம் கிடைத்த பூர்வீக சொத்து. நானும் சொத்து வரி செலுத்தி, மின் இணைப்பு பெற்று, வீடு கட்டி குடியேறியுள்ளேன். நான் வசிக்கும் வீட்டுக்கு மேலே சந்திரகாசன் மகன் முருகானந்தம் வசிக்கிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, நானும் எனது மகனும் ஊரில் இல்லாத நேரத்தில், எங்கள் இடத்தில் 7 சென்ட் நிலத்தை முருகானந்தம் ஆக்கிரமித்துள்ளார்.
எனது வீட்டின் மேற்புறத்தில் ஹாலோ பிளாக் கல்லால் சுவர் எழுப்பியுள்ளார். இதுகுறித்து கேட்டபோது, என்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையிலும் என் மீது நடவடிக்கை எடுக்க முயன்றால் அடித்து கொன்று விடுவேன் என முருகானந்தம் மிரட்டினார். மேலும் அந்த இடத்தில் கடை கட்டி எங்கள் இடத்தில் கல், மணல் உபகரணங்களை வைக்க முயற்சி செய்தார்.
எனக்கு இப்போது சுமார் 70 வயதாகிறது. என் மகனுக்கு உடம்பு சரியில்லை. வயது முதிர்வு காரணமாக எங்கள் சொத்தை முழுமையாக அபகரிக்க முயன்றவர் மீது திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். எனவே, எங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கையில் பேனர்களை ஏந்தி, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.