சென்னை: “தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கு 3192 பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான போட்டித் தேர்வுகள் நடைபெற்று 80 நாட்களாகியும் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காமல் பள்ளிக் கல்வித்துறை காலதாமதம் செய்து வருகிறது.
பணி ஆணை வழங்காததால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.
ஆசிரியர்களுக்கு பணி வழங்குவதில் அரசு காலதாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது. பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, விண்ணப்பித்தவர்களுக்கு பிப்ரவரி 4-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, மே 18-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதையடுத்து, ஜூன் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் ஜூலை 18-ம் தேதி வெளியிடப்பட்டது. இவர்களுக்கான பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வை அன்றே நடத்தி பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கலாம்.
ஆனால், 80 நாட்கள் கடந்தும், இன்று வரை தமிழக அரசு அதை செய்யாததன் காரணம் தெரியவில்லை. தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படவில்லை.
இதனால், அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்படிப்பட்ட சூழலில் மின்னல் வேகத்தில் நடைபெற வேண்டிய ஆசிரியர் நியமனப் பணியை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
ஆசிரியர் நியமனத்துக்கான பணிகள் துவங்கி ஓராண்டு கடந்தும், இன்னும் முழுமை பெறாதது மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகும். தமிழக அரசின் கடும் நிதி நெருக்கடியால் ஆசிரியர் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டாலும் வேலை கிடைக்குமா, கிடைக்காதா?
3192 பேர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் துயரத்தைப் போக்கி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை.
எனவே தமிழக அரசு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 3192 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.