சென்னை: அண்ணா பல்கலை பதிவாளர் பிரகாஷ் நேற்று வெளியிட்ட அறிக்கை:- சென்னை அண்ணா பல்கலை கிண்டி பொறியியல் கல்லுாரியில் படிக்கும் மாணவி, நேற்று முன்தினம் ராஜா அண்ணாமலைபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “கல்லூரி வளாகத்தின் பின்புறம் எனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எங்கள் இருவரையும் மிரட்டினார்.
பின்னர், அதே நபர் எனது நண்பரை தாக்கி என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். இந்த வழக்கை தீவிர விசாரணை நடத்தி வரும் ஆர்.ஏ. புரம் கோட்டூர்புரம் காவல் நிலைய உதவி ஆணையர் தலைமையில் மகளிர் காவல் நிலைய போலீஸார் குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உள் புகார் குழுவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த குழு விசாரணை நடத்தி வருகிறது.
போலீஸ் விசாரணைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் எப்போதும் பணியில் இருப்பார்கள். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க பல்கலைக்கழக அளவில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொறுத்த வரையில், அனைத்து மாணவர்களின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தனது சமூக வலைதள பக்கத்தில், “இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க பல்கலைக்கழக அளவில் உரிய முடிவுகள் எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார்.