
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலையின் கருத்துகள் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படுத்தும் என வரும் ஊகங்களை மறுத்தார். 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி இந்த கூட்டணி நிலைபெற்று தான் இருப்பதாகவும், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கூற்றுகளே அதிகாரபூர்வமானவை எனவும் தெரிவித்தார்.

தமிழகம் தொடர்பாக நயினார் நாகேந்திரனின் கருத்தும் கட்சியின் நிலைப்பாடாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.அண்ணாமலை சில நேரங்களில் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிப்பதாக தமிழிசை விளக்கம் அளித்தார். அவர் கூறியது கட்சியின் அதிகாரபூர்வக் கருத்தாக அல்ல என்றும், அவர் தானாகவே அது தனிப்பட்டதாக சொல்லி விட்டார் என்றும் கூறினார்.
அரசியல் எதிரணிகள் அவற்றைத் திரித்து பயன்படுத்த முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் தமிழகம் முழுவதும் செயல்பட உள்ளதென்றும், இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையே நிலவும் என்றும் அவர் உறுதி செய்தார்.புதிய தலைமை அமைப்புகள் வரும்போது, கட்சிகளின் நிர்வாகங்களில் மாற்றம் ஏற்படுவது இயல்பானது என தமிழிசை கூறினார்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மாறுவது ஒன்றும் தவறில்லை என்றும், ஒவ்வொரு தலைவரும் தம் பாணியில் பேசுவார்கள் என்பதும் இயல்பானது என்றும் அவர் கூறினார். அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.இந்த உரையின் பின்னணியில், அண்ணாமலை பொதுவெளியில் பேச வேண்டாம் என சுதாகர் ரெட்டியிடம் தமிழிசை கேட்டுக் கொண்டதாக செய்தி வெளியானது.
ஆனால், இந்த தகவலை தமிழிசை மறுத்துள்ளார். அவருடன் பாராளுமன்ற தேர்தல் பின்னணியில் சில அரசியல் விவாதங்களை மட்டுமே நடத்தியதாகவும், பிரதமர் மோடியின் சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்லும் திட்டங்களைப் பற்றியே பேசப்பட்டதாகவும் தெரிவித்தார். கூட்டணி பற்றிய நிலைப்பாடு மேலிடத்தால் தெளிவுபடுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.