சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் இல்லத்திற்கு திடீரென சென்று அவரை நேரில் சந்தித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகக் கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருவதாகவும், அவர் குருமூர்த்தியுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகப்போகிறார் என்ற கூற்று சமூக வலைதளங்களிலும், வட்டார அரசியலிலும் பரவலாக பேசப்பட்டு வரும் நேரத்தில் அவர் குருமூர்த்தியை சந்தித்திருப்பது பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது. ஒருபுறம் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக பாஜகவில் தலைமை மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், அமித்ஷா இன்று இரவு 10.20 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையை வந்தடைகிறார். அவர் கிண்டியில் உள்ள ஓர் நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். நாளை அவர் முதலில் தமிழக முக்கிய பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்கிறார். அந்த சந்திப்பில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதையடுத்து அமித்ஷா மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பில், தமிழக அரசியல் நிலவரம், பாஜக-அதிமுக இடையேயான கூட்டணியின் நிலை, மற்றும் தலைமை மாற்றம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து பேசப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது அண்ணாமலைவும், மற்ற முக்கிய பாஜக பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.
இதற்கிடையில், பாஜக புதிய மாநிலத் தலைவர் யார் என்ற விவாதமும் தீவிரம் அடைந்துள்ளது. நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் அந்த பதவிக்கான முன்னணியில் உள்ளதாக வதந்திகள் கிளம்பி இருக்கின்றன. இறுதித் தீர்மானம் அமித்ஷா முன்னிலையில் நிகழும் கூட்டத்திலேயே எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “அமித்ஷாவின் வருகை மாநில நிர்வாகிகளை சந்திப்பதற்கே, அதற்கும் தலைவர் மாற்றத்துக்கும் சம்பந்தமில்லை” என விளக்கம் அளித்திருந்தாலும், தற்போது அவரது நடவடிக்கைகள் வேறுபட்ட அறிகுறிகளை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்தப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு, அமித்ஷா நாளை மீண்டும் டெல்லி திரும்பவுள்ள நிலையில், தமிழக பாஜகவில் விரைவில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்படப்போகிறது என்ற பரவலான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.