சென்னை: வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) ஆட்சி அமைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் பாதி தொகுதிகளில் பாஜக போட்டியிட வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2026 சட்டசபை தேர்தலில் பெரிய வெற்றி பெற்று தமிழ்நாட்டில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என உறுதியாக பேசியார். இதனால், அதிமுகவினர் தனியாக ஆட்சி அமைக்கும் என்று கூறி வந்த நிலையில் புதிய அரசியல் பரபரப்பு உருவாகியுள்ளது.
அண்ணாமலை எழுதிய கடிதத்தில், பாஜக சமீபத்தில் பெற்ற வாக்கு சதவீத அடிப்படையில் தொகுதி பங்கீடு செய்ய வேண்டும் என்றும், அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் பாதி தொகுதிகளில் பாஜக போட்டியிட வேண்டும் எனக் கூறியுள்ளார். கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அதிமுக கூட்டணிக்கு 19.4 சதவீத வாக்குகள் கிடைத்தபோது, பாஜக 11.4 சதவீதம் பெற்றது. சில முக்கிய மாவட்டங்களில் பாஜக, அதிமுகவை முறியடித்ததுடன், மதுரை, கோவை போன்ற பகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
கன்னியாகுமரி விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக இரண்டாம் இடம் பிடித்ததும், அதிமுக நான்காவது இடத்தில் தள்ளப்பட்டதும் பாஜக வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அதனால், கூட்டணியில் பாஜக உண்மையான வாக்கு சக்தி பாராட்டி, அதற்கேற்ற தொகுதிகள் கொடுக்கப்பட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அதாவது, அதிமுக 140 தொகுதிகளில் போட்டியிடின், பாஜக 70 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இது நடைபெறுமானால், 2026 சட்டசபை தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று அண்ணாமலை நம்புகிறார்.
மேலும், 2029 லோக்சபா தேர்தலில், இந்த கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாகும் என்றும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணியின் நிலை உறுதிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.