தமிழக அரசு நடத்தும் பருவநிலை மாற்ற மாநாட்டிற்கான சின்ன வடிவமைப்பு போட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு நடைபெறவுள்ளது. முதல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த, மாநில சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை சார்பில், பருவநிலை மாற்றம் மாநாடு 3.0-ல் நடத்தப்படுகிறது. பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு பணியில் இளைஞர்களை ஈடுபடுத்தும் வகையில், இந்த மாநாட்டுக்கான சின்ன வடிவமைப்பு போட்டி நடத்தப்படும். இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், இளைஞர்கள் பங்கேற்கலாம்.
இந்த போட்டி இளைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், பருவநிலை மாற்ற பிரச்சனையை தீர்க்க மாநில அரசு எடுத்து வரும் முயற்சிகளில் பங்கேற்கவும் ஒரு தளத்தை வழங்கும். மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட லோகோ நிலையான வளர்ச்சி, புதுமை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை எடுத்துக்காட்டுவதாக இருக்க வேண்டும். முதல் பரிசாக சிறந்த சின்னத்தை வடிவமைப்பவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும். மேலும் 10 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது படைப்புகளை QR குறியீடு மூலமாகவோ அல்லது mascotccm@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ ஜனவரி 10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதற்கான QR குறியீடு https://tnclimatechangemission.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை, 1, ஜீனியஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை 600015 (தொலைபேசி எண். 044- 24336421) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.