சென்னை: டாக்டர்கள், செவிலியர்கள் உட்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் நேற்று நடைபெற்ற சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் கூறியதாவது:-
இளம்பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, தமிழகத்திற்கு புதிதாக 100 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க கோரிக்கை வைக்கப்படும்.
‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் 1 கோடியே 84,280 பேர் பயனடைந்துள்ளனர். ‘இன்னுயிர் காப்போம்; ‘நம்மை காக்கும் 48’ என்ற திட்டத்தின் மூலம் இதுவரை 2 லட்சத்து 61,500 பேர் விபத்துகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த அரசு செலவிட்ட தொகை ரூ.228.62 கோடி. மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இதுவரை 1,021 மருத்துவர்கள் உட்பட 3,036 பணியிடங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இத்துறைக்கு 2,553 டாக்டர்கள், 2,750 கிராம சுகாதார செவிலியர்கள், 986 மருந்தாளுனர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 557 இதர பணியாளர்கள் என மொத்தம் 7,000-க்கும் மேற்பட்டோர் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
இது தொடர்பான அனைத்து நீதிமன்ற வழக்குகளும் விரைவில் தீர்க்கப்படும். கடந்த மூன்று ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் தமிழக சுகாதாரத்துறை பல விருதுகளை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.