சென்னை: சென்னையில் உள்ள வீடுகள்தோறும் குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்ய சென்னையைச் சேர்ந்த டோரன்ட் கேஸ் என்ற நிறுவனத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் ரூ. 48 கோடியில் செயல்படுத்த உள்ளது. இதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வெட்டுவாங்கேணி, நீலாங்கரை, திருவான்மியூர், அடையாறு, சேப்பாக்கம், பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், நெட்டுக்குப்பம் ஆகிய பகுதிகள் வழியாக 466 கி.மீ நீளத்துக்கு கடற்கரையோரம் குழாய்கள் பதிக்கப்படும்.

இதில், கடலோர ஒழுங்குமுறை மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், 260 கி.மீ., நீளத்துக்கு குழாய்கள் பதிக்கப்படும். எனவே, இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம், சுற்றுச்சூழல் அனுமதி கோரி, தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. அதை கவனமாக பரிசீலித்த ஆணையம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது. அதை பரிசீலித்த மத்திய அரசு தற்போது இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.