சென்னை: தினசரி காபியை விரும்பி பருகுவதால் உங்களுக்கு கிடைக்கும் சில முக்கிய ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். காபியில் உள்ள காஃபின் நமக்கு எனர்ஜியை தரும் ஒன்றாக இருக்கிறது.
மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிப்பதில் காஃபின் ஒரு முக்கிய தூண்டுதலாக இருக்கிறது. காஃபின் குறிப்பாக கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற கெமிக்கல்களின் சுழற்சியை உடலில் அதிகரிக்கிறது. சிறிய அளவிலான காஃபின் கூட நம்மை உற்சகமாக மற்றும் புத்துணர்ச்சியாக உணர வைக்கும்.
நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறது… தினமும் 1 கப் காபி குடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 6 சதவீதம் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காஃபின் தவிர காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். இதிலிருக்கும் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நீரிழிவு நோய்களைத் தடுக்கும். காபியில் உள்ள மெக்னீசியம் மற்றும் குரோமியம் போன்ற மற்ற தாதுக்களும் நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
பார்கின்சன் நோய் அபாயத்தை குறைக்கும்.. பார்கின்சன் நோய் என்பது நரம்பியல் சிதைவுக் கோளாறு. பொதுவாக இது வயதான காலத்தில் ஏற்படும். தொடர்ந்து காபி குடிப்பவர்களுக்கு பார்கின்சன் நோயின் அபாயம் குறையும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கூட தினசரி மிதமான அளவு காபி குடிப்பது அவர்களின் இயக்கங்களை சிறப்பாக கட்டுப்படுத்த உதவும்.
டிப்ரெஷனை குறைக்கிறது.. காபி மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் போன்ற சிறந்த உணர்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தினசரி அடிப்படையிலான வழக்கமான காபி நுகர்வு இன்பம், பாசம், நட்பு, மனஅமைதி மற்றும் அதிக மகிழ்ச்சி போன்ற நேர்மறையான உணர்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எனவே தினசரி குறைந்தபட்சம் ஒரு கப் காபியை பருகுவது டிப்ரெஷன் ஏற்படும் வாய்ப்புகளை 8% வரை குறைக்கிறது.
பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும்.. காபியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ரத்த அழுத்தம், எல்டிஎல் கொழுப்பு மற்றும் பலவற்றைக் குறைப்பதன் மூலம் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை வெகுவாக குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.