சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் நினைவாக, கடந்த 1969-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்ட அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், கடந்த 40 ஆண்டுகளாக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நோயாளிகளுக்கு இலவச புற்றுநோய் சேவையை வழங்கி வருகிறது. மொத்தம் 290 படுக்கைகள் மற்றும் 230 பணியிடங்களுடன் செயல்படும் இந்த மருத்துவமனையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சை சேவையை மேம்படுத்தும் வகையில் இந்த மருத்துவமனையை 750 படுக்கைகள் கொண்ட பரிந்துரை மையமாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6,36,347 சதுர அடியில் தரை தளம் மற்றும் 5 தளங்கள் கொண்ட அதிநவீன பரிந்துரை மையம் ரூ. 250.46 கோடியில் அமைக்கப்பட்டது.

ரத்தவியல், குழந்தை புற்றுநோயியல், புற்றுநோய் தடுப்பு மற்றும் சமூக புற்றுநோயியல், மாநில புற்றுநோய் பதிவேடு, நோய்த்தடுப்பு சிகிச்சை அல்லது நல்வாழ்வு சேவைகள், மனநல மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை, பல் அறுவை சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை, இரத்தமாற்ற மருந்து மற்றும் எலும்பியல் ஆகியவற்றுடன் கூடுதலாக செயல்பட உள்ளன. இதற்காக 49 மருத்துவ அலுவலர்கள், 2 மருத்துவ சாரா பணியாளர்கள், 207 செவிலியர்கள், 7 அமைச்சக பணியாளர்கள், 129 துணை மருத்துவ பணியாளர்கள் என 394 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன.
இது தவிர சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என 163 பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கான ஒப்புதலும் கிடைத்து தற்போது தமிழக சுகாதாரத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.