தஞ்சாவூர்: சுட்டெரிக்கும் கோடை வெயிலால், நெடுஞ்சாலையோரம் நடப்பட்ட மரக்கன்றுகள் வாடாமல் இருக்க, டேங்கர் லாரி மூலம், தினமும், காலை, மாலை, 36 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கம், அகலப்படுத்துதல், சீரமைப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோரம் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
தஞ்சாவூர்-பட்டுக்கோடடை சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில், தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு துணை மாவட்டங்களில் தஞ்சாவூர் நெடுஞ்சாலை பிரிவில் மட்டும் பணிகள் மேற்கொள்ள 5 ஆண்டு திட்டத்திற்கு ரூ. 650 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் புதிய மரக்கன்றுகளும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-மன்னார்குடி சாலை, தஞ்சாவூர்-வல்லம் பைபாஸ் சாலை, வல்லம்-ஒரத்தநாடு சாலை, தஞ்சாவூர்-பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு முதல் மேலவஸ்தாசாவடி ரவுண்டானா சாலை, பெரம்பலூர்-மானாமதுரை சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் அகலப்படுத்தப்பட்டு, மரக்கன்றுகள் அமைக்கப்பட்டன.

நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு மரத்தை அகற்றினால், பத்து மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற உத்தரவின்படி, பல்வேறு இடங்களில் புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர், ஒரத்தநாடு உட்கோட்ட பகுதிகளில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரோடு போடும் இடங்களில் ஐந்தாண்டுகளுக்கு ரோடுகளை பராமரிக்க வேண்டும் என்றும், அங்கு நடப்படும் மரக்கன்றுகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனமே பராமரிக்க வேண்டும் என்றும் விதி உள்ளது. இப்பகுதியில் புங்கன், வேம்பு, அத்தி, நாவல், துளியா மரம், மா, மகிழம்பூ, பூவரச மரம், ஆலமரம், அரச மரம் என பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டு, கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மரங்கள் வளர்ந்துள்ளன.
சமீபத்தில்தான் சில இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் வாடிய மரக்கன்றுகளுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வெப்பத்தால் புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகளும், ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகளும் வெயிலால் வாடி கருகி வருகின்றன. இந்த மரக்கன்றுகள் வெயிலால் வாடாமல் இருக்க டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
18 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரி மூலம் மரக்கன்றுகளுக்கு காலை, மாலை என இருவேளை தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. தினமும் 36,000 லிட்டர் தண்ணீர் ஊற்றி செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொடைக்கல் முழுவதும் டேங்கர் லாரிகளில் தண்ணீர் ஊற்றி செடிகளை பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.