சென்னை: பைக் டாக்சிகளை தடை செய்யக்கோரி கோட்டை நோக்கி பேரணி நடத்தப்போவதாக ஆட்டோ டிரைவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் சென்னை எழும்பூர்-லங்காஸ் கார்டன் சாலையில் இருபுறமும் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் கூவம் ஆற்றுப்பாலத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணியாக சென்றனர்.
வழியில் பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேயர் சுந்தர் ராவ் நாயுடு சிலை அருகே சென்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலசுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்ட விரோதமாக இயக்கப்படும் பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும் என்பதே ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கையாக உள்ளது. பைக் டாக்சிகளை 4 ஆண்டுகளாக தடை செய்ய வேண்டும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் கூறி வருகிறார். 2022-ல், உயர் நீதிமன்றத்தில் பைக் டாக்சிகள் மற்றும் அவற்றின் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு வழக்கில் 6 மாதங்களுக்குள் ஆப் மீதான தடை நீக்கப்பட்டது.
இருப்பினும், பைக் டாக்சிகளுக்கான தடை அப்படியே உள்ளது. சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது கூட, பைக் டாக்சிகளில் பயணம் செய்த 189 பேருக்கு இன்சூரன்ஸ் கிடைக்காததால், பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை கூறியது. ஆனால், போக்குவரத்து அமைச்சர் தடை இல்லை என்று கூறுகிறார். பைக் டாக்சிகளால் 5 லட்சம் ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், 11 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் ஏன் மாற்றப்படவில்லை?
இது தொடர்பான விசாரணையில் மீட்டர் கட்டணம் தொடர்பான பரிந்துரைகளை நாங்கள் முன்வைத்தோம். இந்த கோப்பு முதல்வர் மேஜையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஆப்பை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டிருந்த நிலையில், சர்வதேச ஆப் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் உடனடியாக கட்டணத்தை குறைத்தன. ஆனால் செயலி உருவாக்கம் நிலுவையில் உள்ளது.
எனவே, மீட்டர் கட்டணத்தை உயர்த்தி ஆப் மூலம் அமல்படுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. மகேந்திரன், கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் சம்பத், மாரியப்பன், கலைராஜன், வேணுராம், ரமேஷ், ரகு உட்பட பலர் பேரணியில் பங்கேற்றனர்.