தொடர்ச்சியாக திமுக அமைச்சர்களுக்கு சட்டப்பிரச்சினைகள் எழுந்துக் கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் சொத்துக்குவிப்பு வழக்கில் பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை விடுவித்த திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
2006 முதல் 2010 வரை திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை புகார் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, அவரும், அவரது மனைவியும், மகன்களும் குற்றவாளிகளாக குறிக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்ற காரணத்தால் அனைவரையும் விடுவித்தது.

இந்த தீர்ப்பு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இன்று அந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, ஐ.பெரியசாமிக்கு எதிரான விடுதலை உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரணைக்கு அனுப்ப தமிழக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை ஆறு மாதங்களில் முடிக்கவும் திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு கட்டளை வழங்கப்பட்டது.
ஏற்கனவே அமைச்சர்களான செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், துரைமுருகன், எம்.ஆர்.கே மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தற்போது ஐ.பெரியசாமிக்கும் அதே வகை சிக்கல் ஏற்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வழக்கின் மறுவிசாரணை திமுக அரசுக்கு இன்னும் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காலமே நிர்ணயிக்கும்.