நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று பைக்காரா அணை. இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதியில் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். உதகை நகரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது.
தற்போது, பைக்காரா அணையில் நீர் இருப்பு குறைந்தாலும், படகு சவாரி செய்ய விரும்பும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 30 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் எட்டு இருக்கை மோட்டார் படகுகள் 19, பத்து இருக்கை மோட்டார் படகு ஒன்று, 15 இருக்கை மோட்டார் படகு ஒன்று, மூன்று இருக்கை அதிவேக படகுகள் ஏழு உள்ளன.
அத்துடன், சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்க்க புதியதாக ஐந்து இருக்கை கொண்ட உல்லாச படகு மற்றும் இரண்டு ‘வாட்டர் ஸ்கூட்டர்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு மின் உற்பத்திக்காக பைக்காரா அணை கட்டப்பட்டது. இதன் நீர் மின் நிலையத்தில் நாள்தோறும் 2 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
மின் உற்பத்திக்காக அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படுவதால், தற்போது நீர் இருப்பு குறைந்துள்ளது. பைக்காரா அணையின் முழு கொள்ளளவான 110 அடியில் தற்போது 64 அடியே நீர் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், பைக்காரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குறைந்து, சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பைக்காரா படகு இல்ல ஊழியர்கள் கூறுகையில், பருவ மழையில் அணை நிறைந்திருந்தாலும், தற்போது மின் உற்பத்திக்காக நீர் வெளியேற்றப்படுவதால் நீர் மட்டம் குறைந்துள்ளது. இருப்பினும், படகு சவாரியில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. வழக்கம்போல் படகு சேவை இயங்கிக்கொண்டிருக்கிறது என்று தெரிவித்தனர்.