சென்னை: கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் தொடர்ந்து பெய்து வருகிறது.
சில இடங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய இந்த தென்மேற்கு பருவமழை இன்னும் சில நாட்களில் சரியாகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அக்டோபர் 20-ம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகி வருகிறது.
மேலும் இந்த ஆண்டு தமிழகத்திற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மண்டல சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இன்னும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து வருகிறது.
மேலும் இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய அரபிக் கடல் பகுதிகளில் தற்போது நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
இது மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா-கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது. மேலும், தென்மேற்கு வங்கக் கடலில் ஒரு சுழற்சி மண்டல காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக மழை பெய்து வருகிறது. மேலும், வங்கக் கடலின் மத்திய பகுதியில் நாளை (12-ம் தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது. இதையடுத்து, காற்றின் வேகம் மற்றும் கிழக்கு திசையில் இருந்து பெய்யும் மழையின் தன்மையை பொறுத்து, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அறிவிக்கப்படும்.
மேலும், திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12, 13, 14 ஆகிய தேதிகளிலும் இதே நிலை தொடரும். குறிப்பாக வரும் 13-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 14-ம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, அந்த இரு தினங்களிலும் மேற்கண்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மழை தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என பாலச்சந்திரன் கூறினார்.