மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் பாமக வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இளைஞர் பெருவிழாவில், பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு அரசியல் எழுச்சி அளிக்கும் பேச்சை நிகழ்த்தினார். இதில், தமிழகத்தில் வன்னியர் சமூகத்தின் ஐஏஎஸ் அதிகாரிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி, சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என வலியுறுத்தினார்.

தமிழகத்தில் 398 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றுகிற நிலையில், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் வெறும் 18 பேரே உள்ளனர் என்றார்.மேலும், சமூக நீதிக்காக போராடும் திமுக அரசு, உண்மையில் சமூக நீதியின் அடிப்படை கோட்பாட்டையே மறந்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். கலைஞருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் பிடித்துக் கொடுத்தவர் ராமதாஸ் என்றும், ஆனால் அவரது மகனான ஸ்டாலின் இன்று வன்னியருக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை நோக்கக்கூட இல்லையெனவும் பாலு விமர்சனம் செய்தார்.மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தீர்மானித்துள்ளதாகவும், மாநில அரசும் இதற்குத் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்தார்.
திமுக மீது அவர் கடுமையாக தாக்கி, விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்பதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றார். இதுவரை பாமக வலியுறுத்தும் கோரிக்கைகளை ஸ்டாலின் அரசு அலட்சியமாகவே பார்த்துவருவதாகவும் அவர் கூறினார்.
இந்த விமர்சனம் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏற்பட்டுள்ள கூட்டணி மாற்றங்களை ஒட்டியதா என அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது. பாமக இளைஞர் மாநாட்டில் மக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர். இது, பாமக மீண்டும் வன்னியர் சமூகத்தின் ஆதரவைப் பெற முடியும் என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.