பொள்ளாச்சி : பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் வாழைத்தார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், திருச்சி, கரூர், தூத்துக்குடி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் கொண்டு வரப்படும் வாழைப்பழங்கள் எடைக்கு ஏற்றவாறு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக வெளி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் குறைந்த அளவே கொண்டு வரப்பட்டது. கடந்த வாரம் முதல், இம்மாதம், கோவில்களுக்கு, சுபமுகூர்த்த தினங்கள், விசேஷ நாட்கள் என தொடர் வருவதால், அனைத்து வகை வாழைப்பழங்களும் விலை உயர்ந்துள்ளன.
அதேபோல், நேற்று வெளி மாவட்டம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் வாழைத்தார் வரத்து குறைந்தது. இந்த வாரமும் சுபமுகூர்த்த தினங்கள் வருவதால் அனைத்து வகையான வாழைப்பழங்களும் அதிக விலைக்கு விற்பனையானது. இதில் செவ்வாழைத்தார் ரூ.68, பூவந்தார் ரூ. 45, சாம்ராணி ரூ. 38, மோரிஸ் ரூ. 40, ரஸ்தாளி ரூ. 45, நேந்திரன் ரூ. 45, கேரளா ரஸ்தாளி கிலோ ரூ. 46-க்கும் என கடந்த வாரத்தைவிட கூடுதல் விலைக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.