சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், திருப்பாசேத்தி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் வாழைத்தார் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை தொடர்ந்து திருமணம், கோவில் திருவிழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் தேவை அதிகரித்துள்ளது. மதுரை மார்க்கெட்டில் வரத்து குறைந்ததாலும், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் விளைச்சல் பாதித்ததாலும் இந்த ஆண்டு வாழைத்தார் வரத்து குறைந்தது.
இதனால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் சுமார் 100 பழங்கள் அடங்கிய செவ்வாழை தார் ரூ. 1400 ஆக இருந்தது, தற்போது ரூ. 2500 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் உள்ளூர் வாழைப்பழத்தின் விலை ரூ.350 முதல் ரூ. 900 ஆக உயர்ந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

வாழைத்தார் தேவை அதிகரித்தாலும், அனைத்து நாட்களிலும் ஒரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் விசேஷ நாட்களில் வாழைப்பழத்தின் விலை உயர்வினால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.