தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை விவகாரம் பெரிய சர்ச்சையாக உருவெடுத்து வருகிறது. இதன் காரணமாக, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க முடியும் என்று மத்திய அமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே போதுமானது எனக் கூறி, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், தமிழ்நாட்டிற்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் போதுமானவை. இந்தி தமிழ்நாட்டிற்கு தேவையில்லை. மும்மொழி கொள்கை என்பது ஒரு தேவையற்ற விவாதம். எந்தக் கட்சியும் இதை முன்வைக்கவில்லை, பாஜகவை தவிர.
வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் இலக்கணம், இலக்கியம் படித்து வருவது இல்லை. தேவைக்கேற்ப தமிழை கற்றுக்கொள்கிறார்கள். அதேபோல், தமிழர்கள் வடமாநிலங்களுக்கு செல்வதோரும் அங்கு உள்ள மொழிகளை கற்றுக்கொள்கிறார்கள். மத்திய அரசு அரசு பள்ளிகளுக்கு வடமாநிலங்களில் இருந்து இந்தி ஆசிரியர்களை அனுப்பும் திட்டம் மிகுந்த ஆபத்தானது. இது நடந்தால், வரலாற்றையே மாற்றியமைக்கும் முயற்சி செய்யப்படும். காந்தி கெட்டவர், கோட்சே நல்லவர் என்கிற போலியான வரலாறு போதிக்கப்படும்.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டம் கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்கள் இருந்தாலே பேச்சுக்கே நேரம் குறைவு. ஆனால், இது 800க்கும் மேல் உயர்ந்தால், மிகப்பெரிய குழப்பம் ஏற்படும். அதிமுக மற்றும் பாஜக இடையே நேரடி அல்லது ரகசிய உறவு உள்ளதா என்பது தெரியாது. ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைத்த எந்தக் கட்சியும் தோல்வியை சந்திக்கும்.
எங்கள் கட்சி சுதந்திரமான கட்சி. யார் வேண்டுமானாலும் டெல்லி சென்று கட்சி தலைமையைக் சந்திக்கலாம். ஏற்கனவே, தமிழக காங்கிரஸ் கமிட்டி தொடர்பாக கட்சித் தலைமையிடம் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் இந்தக் கருத்து மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.