ராமநாதபுரம்: மதுரை திருப்பரங்குன்றம் மலையில் அசைவம் சாப்பிட்ட நவாஸ் கனி எம்.பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணிமுருகேசன் கட்சியினருடன் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்திற்கு சென்றார். இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் தரணிமுருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நவாஸ் கனி எம்.பி. இந்துக்களின் புனித ஸ்தலமான திருப்பரங்குன்றம் மலையில் ஏறி, தனது தோழர்களுடன் அசைவ உணவு சாப்பிட்டார். மலையில் ஏறும் போது அங்கிருந்த போலீசாரை மிரட்டும் தொனியில் அசைவ சாப்பாடு எடுக்கலாமா, அசைவ உணவு கொண்டு வருபவர்களை தடுக்காதீர்கள் என மிரட்டினார். மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவர் செயல்பட்டுள்ளார்.
மேலும், திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுத்து விட்டார். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அவரது செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதன்மையானதாகக் கருதப்படும் இம்மலை குடைவரைக் கோயிலாகும். அந்த மலையில் முருகப்பெருமான் சிலை செதுக்கப்பட்டுள்ளது. அந்த மலையின் பிரமாண்டத்தை வேண்டுமென்றே குறைத்துவிட்டார். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட நவாஸ் கனி எம்.பி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.