சென்னை: கோவிலம்பாக்கம் டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டிய பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர். டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறி தமிழக பாஜக சார்பில் கடந்த 17-ம் தேதி டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, ’டாஸ்மாக் கடைகளில் ஸ்டாலின் படம் ஒட்டும் போராட்டம் நடத்தப்படும்’ என, தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ஸ்டாலின் படம் ஒட்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தென் சென்னை மாவட்ட பாஜக சார்பில் கோவிலம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படம் ஒட்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகிகள் அன்னபூரணி, ராணி, மும்தாஜ், விஜயகுமார் உள்ளிட்டோர் டாஸ்மாக் கடைகளில் ஸ்டாலின் படத்தை ஒட்டினர். இதையடுத்து அனுமதியின்றி ஸ்டாலின் படத்தை ஒட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.
தற்போது சட்டப் பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், தலைமைச் செயலகம் அருகே யாரும் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்பதற்காக, தலைமைச் செயலகம் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை தமிழக அரசுக்கு எதிராக பேனர்களுடன் காரில் வந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க.வினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடம்பத்தூர் வட்டாரத் தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட பாஜகவினர் 5 பேரையும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அருகே கோட்டை போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.