சென்னை: முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்தும், மாணவிக்கு நீதி கேட்டும் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
போலீசாரின் தடையை மீறி இந்த போராட்டம் நடத்தப்பட்டதால், போராட்டத்தில் பங்கேற்க வந்த பாஜகவினரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதனால், பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வள்ளுவர் கோட்டம் பகுதிக்கு வந்தார்.
போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், கரு. நாகராஜன் உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர்களை அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தார். முன்னதாக கைது செய்யப்பட்ட பாஜகவினர் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும், தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.