கோவை: தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்க்கு பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய கைத்தறி தினத்தையொட்டி, கோவை சூலூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று (ஆகஸ்ட் 23) கல்லூரி மாணவர்களுக்கான கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டி நடைபெற்றது.
மாணவர்கள் கைத்தறி ஆடைகளை அணிந்து அணிவகுப்பில் பங்கேற்றனர். பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், நடிகை நமீதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். முன்னதாக, இருவரும் மாணவர்களுடன் இணைந்து ஆடை அணிவகுப்பில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது: கல்லூரி மாணவர்களுக்கு கைத்தறி நெசவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 7வது ஆண்டாக கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகளை நடத்தியுள்ளோம்.
கைத்தறி நெசவாளர்களை ஆதரிக்க வேண்டும், கைத்தறி நெசவு உற்பத்தியை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள்.
இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான கொடிகளையும் தலைவர்களையும் தமிழ்நாடு கண்டுள்ளது. கோவையில் கட்டப்பட்ட மேம்பாலம், அத்திக்கடவு-அவினாசி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டாலும், தற்போது திமுக ஆட்சியில் பணிகள் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. ”தி.மு.க., பொறுப்பேற்ற பின், கோவைக்கு செம்மொழி பூங்கா உட்பட, பல திட்டங்களை அறிவித்துள்ளனர்.