பழனி: நடிகர் விஜய் ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். பழனியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பழனி மலையடிவாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் பாதிக்கப்படும் ஏழை மக்களைப் பற்றி திமுக அரசுக்கு அக்கறை இல்லை. இந்த விஷயத்தில் அரசு அலட்சியமாக செயல்படுகிறது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற பெயரில் யாரையும் கலந்தாலோசிக்காமல் மக்களை பாதிக்கும் வகையில் செயல்படும் ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
விநாயகர் சதுர்த்தி அன்று தனது படத்தை வெளியிட்டு கோடிகளை சம்பாதிக்கும் நடிகர் விஜய், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டாமா? தனி நபராக வாழ்த்துவதா வேண்டாமா என்பது அவரவர் விருப்பம்.
ஆனால், ஒரு கட்சியின் தலைவராக இருந்தும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்புவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.