சமீபகாலமாக, இந்தியாவின் மிகப் பெரிய பொதுப் போக்குவரமான ரயில்களின் குளிர்சாதனப் பெட்டிகளில் வழங்கப்படும் போர்வைகள் குறித்த நேரத்தில் துவைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்களில் உள்ள போர்வைகள் மாதம் ஒருமுறை துவைக்கப்படுகிறது.
ஆண்டுக்கு 60 கோடி பயணிகளை ஏற்றிச் செல்லும் தெற்கு ரயில்வே அளித்த விளக்கத்தில், கடந்த 2010-ம் ஆண்டு 3 மாதங்களுக்கு ஒருமுறை போர்வைகளை துவைக்கும் வழக்கம் இருந்ததாகவும், பின்னர் 2 மாதங்களாக குறைக்கப்பட்டு 2016-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை துவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேசின்பிரிட்ஜ், கொச்சுவேலி, நாகர்கோவில், எர்ணாகுளம் ஆகிய இடங்களில் சலவை இயந்திரங்கள் உள்ளதாகவும், மதுரை, கோவை, மங்களூருவில் சலவைக்கூடங்கள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சலவை இயந்திரங்கள் உள்ள இடங்களுக்கு போர்வைகளை எளிதில் எடுத்துச் செல்ல முடியாவிட்டால், போர்வைகளை துவைப்பதற்கான இடைவெளி அதிகரிக்கும் என்றும் விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மற்றும் ரயில்வே விளக்கம் அளித்தும், ரயில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் விசாரித்த போது, கறை படிந்திருந்தால் அல்லது துர்நாற்றம் வீசினால் தான் விரிப்புகளை துவைக்கிறோம் என்றனர்.
பயணிகளுக்கு வழங்கப்படும் விரிப்புகளில் உணவு கறை, அழுக்கு மற்றும் முடி போன்ற வீடியோக்களை பயணிகள் பகிர்ந்து வருகின்றனர், இது ரயில் பயணத்தில் சுகாதார நடைமுறைகள் குறித்து பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. ராஜ்தானி போன்ற ரயில்களில், ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும் அவை துவைப்பதாக கூறப்படுகிறது.
குளிர்சாதன பெட்டியில் ஒரு விரிப்பு மற்றும் இரண்டு படுக்கை விரிப்புகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும் படுக்கை விரிப்புகள் துவைக்கப்படுவதால், பயணிகள் அதைக் கேள்வி கேட்பதில்லை. ஆனால், தரை விரிப்புகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுவதில்லை என்ற வலுவான குற்றச்சாட்டு உள்ளது. ஒவ்வொரு முறையும் விரிப்புகளை சுத்தம் செய்ய முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஏனென்றால், மற்ற துணிகளை விட விரிப்புகளில் கொட்டப்படும் உணவுத் துகள்களில் கிருமிகள் சேரும் வாய்ப்பு அதிகம்.
விரிப்புகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் மாறும். அதை சுத்தம் செய்யாமல் மற்றொரு பயணிக்கு கொடுக்கும்போது, ஒவ்வாமை, தோல் நோய்கள் போன்றவை எளிதில் பரவ வாய்ப்புகள் அதிகம். கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கும் ரயில்களில் சுகாதாரம் இல்லை என்ற குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இவை எளிதில் தொற்றும் தன்மை கொண்டவை என்பதால், பயணத்தின் போது ஒருமுறை பயன்படுத்தும் போர்வையை துவைக்காமல் மற்றொரு பயணிக்கு கொடுக்கக்கூடாது. அது முடியாவிட்டால், போர்வை நடைமுறையையே மாற்றி, மாற்று ஏற்பாடுகளை செய்வது குறித்து, ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து, பொதுமக்கள் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும்.