அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், ஞானசேகரன் பின்னால் வேறு சில முக்கிய நபர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் ‘யார் அந்த சார்’ எனக் கூறி போராட்டம் நடத்தினர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் அது தொடர்பாக வெளியிடப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) விவகாரம் குறித்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து ஞானசேகரன் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரத்தை உறுதி செய்வதற்காக சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் எதிரே உள்ள அரசு தடய அறிவியல் துறை கட்டிடத்தில் 3 மணி நேரம் குரல் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவருக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. குரல் பரிசோதனையைப் போலவே, இரத்தப் பரிசோதனையும் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒரு முக்கிய குறியீடாகக் கருதப்படுகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வரும் போலீசார், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.