சென்னை: நாடு முழுவதும் சமீபகாலமாக ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது.
இதையடுத்து, பல்கலைக்கழகத்துக்கு விரைந்து வந்த போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் வளாகத்தில் தீவிர சோதனை நடத்தினர்.
ஆனால் எந்தப் பொருளும் பிடிபடாததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களில் மட்டும் 12-வது முறையாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மிரட்டல் கும்பல் வெளிநாடுகளில் இருந்து செயற்படுவதாகவும், இதே கும்பல் தான் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதுபோன்ற மிரட்டல்களை யாரும் நம்ப வேண்டாம் என சென்னை போலீஸ் கமிஷனர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.