தமிழகத்தில் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டம் இன்று முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டு வரப்பட்ட திட்டங்களில் ஒன்று பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் முதலில் சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டு, பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம், கீசேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு தினமும் இட்லி, பொங்கல், சப்பாத்தி, கிச்சடி போன்ற சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன.இத்திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 18.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் நிலையில், கூடுதலாக 2.20 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.