தமிழகத்தில் இதுவரை பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, 2021-ம் ஆண்டு முதல் முடிக்கப்பட்ட கட்டுமானப் பணிகள், வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் குறித்து 234 தொகுதிகளின் எம்எல்ஏக்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
அரசு பள்ளிகள் மற்றும் பொது நூலகங்களில் கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு தொடர்பான கோரிக்கைகள் பெறப்பட்டன. முதற்கட்டமாக, புதிய கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த பள்ளிகள் மற்றும் நூலகங்களின் விவரங்களும், பணிகள் நடைபெற்று வரும் பள்ளிகள் மற்றும் நூலகங்களின் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், 8,171 வகுப்பறைகள், 52 ஆய்வகங்கள், 184 கழிப்பறைகள், 752 மீட்டர் சுற்றுச்சுவர், 28 நூலகக் கட்டடங்கள், 10 மாணவர் விடுதிகள் ரூ. 3,497 கோடியில் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும், 4,412 வகுப்பறைகள், 105 ஆய்வகங்கள், 323 கழிப்பறைகள், 2,290 மீட்டர் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், நம்ம பள்ளி நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் 1,204 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. வரும் 2025-26 நிதியாண்டில் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.