சென்னை: மத்திய அரசின் இந்திய செயற்கை கால்கள் உற்பத்தி கழகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி கருவிகள் வழங்கும் ஏடிஐபி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி கருவிகள் வழங்கும் அளவீட்டு முகாம் வரும் 25-ம் தேதி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் நடக்கிறது. அதன்படி அண்ணாநகர் மண்டலத்தில் அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இன்று முகாம் நடக்கிறது.

இதையடுத்து நாளை திருவொற்றியூர் மண்டலம் புழல் போபிலி ராஜா பள்ளியிலும், 24-ம் தேதி திருவிக நகர் பல்லவன்சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், 25-ம் தேதி கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள மீனாம்பாள் நகர் பகுதியிலும் முகாம் நடக்கிறது. இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். முகாம்களில் பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், மனநலம் குன்றியோர் என பல்வேறு வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிக் கருவிகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல், வாக்கிங் ஸ்டிக், பிரெய்லி கிட், ஸ்மார்ட்போன், மூன்று சக்கர வாகனம், காது கேட்கும் கருவி, செயற்கை கருவி உள்ளிட்ட பல சாதனங்கள் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், மருத்துவச் சான்றிதழ், ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றை அசலில் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.