தஞ்சாவூர்: விவசாயிகளின் அனைத்து வகை கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று தஞ்சாவூர் பெசண்ட் லாட்ஜில் நடந்த தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில செய்தி தொடர்பாளர் கோ ஜீவானந்தம் வரவேற்றார். மாநிலத் தலைவர் முகமது இப்ராஹிம் தலைமை வகித்து பேசினார். நிர்வாகிகள் ஜமால் முகமது, அருண் பாபு, சக்திவேல், ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தஞ்சாவூரில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் காவிரி பாதுகாப்பு மாநில மாநாட்டை வரும் மே மாதம் இறுதியில் நடத்துவது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நடிகர் கார்த்தி மற்றும் எம்பி, எம்எல்ஏக்களை அழைப்பது, மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்த மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி போராடிய விவசாயிகள் மீது வழக்கு போட்டதை ரத்து செய்ய வேண்டும்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி வேட்பாளரை அறிவிக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது. தமிழகம் முழுவதும் பாசன ஏரி, குளங்கள், ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்களை அளவீடு செய்து தனி நபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தர வேண்டும். விவசாயிகளின் அனைத்து வகை கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.
தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகள் வேளாண்மை துறை மற்றும் இதர துறைகளில் மானியம் பெற விவசாயிகள் அட்டை பேரும் கால அவகாசத்தை இரண்டு மாதம் நீட்டித்து தர வேண்டும்.
மத்திய அரசின் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வகுப்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளின் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளராக ராஜேஷ் கண்ணன், தஞ்சாவூர் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளராக ஜெயக்குமார் திருவாரூர் மாவட்ட தலைவராக அல்லாஹ் பிச்சை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் வீராச்சாமி, சசிகுமார், தீபன் ராஜ், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.