2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க தயாராக இருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. 2008-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடுகள் நடப்பதாகவும், மத்திய அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனால் அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டியது. இது தொடர்பாக அமலாக்க இயக்குனரகமும் தனி வழக்கு பதிவு செய்தது. விசாரணை அமைப்புகள் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி, இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிர்த்து, 2018-ல், டில்லி உயர் நீதிமன்றத்தில், சிபிஐ மேல்முறையீடு செய்தது.
ஆனால், வழக்கு விசாரணை தாமதமானது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு தயாராக இருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி விகாஸ் மகாஜன் அமர்வில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் ஆஜரானார். அப்போது, “இந்த வழக்கில் அதிக அளவு ஆவணங்கள் இருப்பதால், விசாரணைக்கு பல தேதிகள் நிர்ணயிக்க வேண்டும் அல்லது விசாரணை அட்டவணையை முடிவு செய்ய வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 18-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.