புது டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையை எதிர்த்து தவெக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, 41 பேர் இறந்த கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. விசாரணை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

கரூரில் நடந்த தவெக பேரணியில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு நிரந்தர வழிகாட்டுதல்களை வகுக்கக் கோரி வில்லிவாக்கம் தினேஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி அமர்வு, தவெகத் தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்ததுடன், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வடக்கு மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டது.
இந்த முடிவுக்கு எதிராக தவெகக் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மையின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.