சென்னை: வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஏப்.9-ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆர்.எஸ்.எஸ்., துவக்கம் முதலே சிறுபான்மையினர் மீது வெறுப்புணர்வை விதைத்து வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை, மதச்சார்பற்ற பண்பு என்ற பாரம்பரியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தை சிறுமைப்படுத்தி அழித்து, நாடாளுமன்ற ஜனநாயக முறைகளை நிராகரித்து, பெரும்பான்மை மத அடிப்படைவாதத்தின் அடிப்படையில் நாட்டை ‘இந்துராஷ்டிரமாக’ கட்டமைக்கும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் தீவிரம் காட்டி வருகிறது.

2014 முதல், அது தனது வகுப்புவாதத் தாக்குதல்களைப் பெருக்குவதற்கு யூனியன் அரசாங்கத்தின் அதிகாரத்தையும் கற்பனை செய்ய முடியாத நிதி சக்தியையும் பயன்படுத்தியது. இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் கருத்து, பரிந்துரைகள், திருத்தங்களை முற்றாக நிராகரித்து, தன்னிச்சையாக வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி வரும் மோடி அரசைக் கண்டித்தும், தேசிய அமைதியின்மையைத் திரும்பப் பெறக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் 09.04.2025 புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
மக்கள் ஒற்றுமையைக் காக்கும் இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துமாறு கட்சியின் மாவட்டக் குழுக்கள் மற்றும் இடைநிலைக் குழுக்கள் கேட்டுக்கொள்கின்றன. நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறது’ என முத்தரசன் தெரிவித்துள்ளார்.