சென்னை: சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடத்திட்டங்களைப் பின்பற்றும் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய, சட்டத்தில் தண்டனைப் பிரிவுகளைச் சேர்க்கக் கோரிய வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இது தொடர்பாக, டெல்லியைச் சேர்ந்த பிரம்மநாயகம் ஆவுடையப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அதில், ‘தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடத்திட்டங்களைப் பின்பற்றும் அனைத்துப் பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயமாக்குவதற்காக கட்டாயத் தமிழ்ச் சட்டம் 2006-ல் இயற்றப்பட்டு 2014 முதல் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்தப் பள்ளிகள் இந்தச் சட்டத்தை முறையாகப் பின்பற்றுவதில்லை.

இந்தச் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் கட்டாயத் தமிழ்ச் சட்டத்தில் தண்டனைப் பிரிவுகள் இல்லாததால், பல தனியார் பள்ளிகள் அதை முழுமையாக செயல்படுத்துவதில்லை. பிற மாநிலங்களிலிருந்து இடமாற்றம் செய்யப்படும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இருப்பினும், பிற மாநிலங்களிலிருந்து இடமாற்றம் செய்யப்படும் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழை விருப்பப் பாடமாகப் படிப்பதில் இருந்து மேலும் விலக்கு அளித்து, டிசம்பர் 2024-ல் வெளியிடப்பட்ட அரசு உத்தரவு, கட்டாயத் தமிழ் மொழிச் சட்டத்தின் நோக்கத்தையே அழிப்பதாகத் தெரிகிறது. அரசு உத்தரவு சட்டவிரோதமானது என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும். கட்டாயத் தமிழ் மொழிப் பாடம் அனைத்துப் பள்ளிகளிலும் கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, சட்டத்தில் தண்டனை விதிகளைச் சேர்க்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.