புதுடெல்லி: சென்னையில், 2007-ல், மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட்டது. 2015-ல், முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்ட சேவைகள் துவக்கப்பட்டன. தற்போது சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையும், விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
இதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம், 2016-ல் துவக்கப்பட்டது. இதன்படி, மாதவரம்-சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 27-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
சென்னை மெட்ரோ ரயிலின் 2-வது கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி கோரி மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு 50 சதவீத பங்களிப்பை வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் பரிந்துரையின் பேரில் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி சென்னையில் 3 வழித்தடங்களில் 128 நிலையங்களுடன் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. ரூ.63,246 கோடி மதிப்பிலான இந்த திட்டம் 2027-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். இவ்வாறு மத்திய அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.