சென்னை: 100 நாள் வேலை திட்டத்தை முடக்க மத்திய பா.ஜ.க அரசு முயற்சிப்பதாகவும், இத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட உள்ள 4 மாத நிதியான ரூ.1635 கோடியை விடுவிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமை வகித்தார்.
அரசியல் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், பி.சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டு மத மோதலை உருவாக்கும் தீய செயல்களில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ்., மதவெறி அமைப்புகளின் முயற்சியை முறியடிக்க வேண்டும். சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் சாலையை உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய சம்பளம் 4 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் கடிதம் எழுதியும் மத்திய அரசு வழக்கம் போல் பதில் அளிக்கவில்லை. அடுத்த கட்டமாக, தமிழக நிதியமைச்சரும், எம்.பி.யுமான கனிமொழி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியான ரூ.1635 கோடியை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். எனவே தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.1635 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.