சென்னை: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா, சென்னை நங்கநல்லூர் பகுதியில் உள்ள 3 நியாய விலைக் கடைகளில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் ராதாகிருஷ்ணனுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பொது விநியோகத் திட்ட சேவைகள் மற்றும் பொருட்களின் அளவு மற்றும் தரம் குறித்தும் கலந்துகொண்ட குடும்ப அட்டைதாரர்களிடம் கேட்டறிந்தார்.
அதன்பின், கூட்டுறவு துறைக்கு சொந்தமான குறைந்த விலை மருந்தகங்கள், கூட்டுறவு பல்பொருள் அங்காடி ஆகியவற்றை பார்வையிட்டு, விவரங்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மற்றும் இந்திய உணவுக் கழகம், மத்திய சேமிப்புக் கிடங்கு கழக உயர் அதிகாரிகளிடம் பொது விநியோகத் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
கூட்டத்தில், இந்திய உணவுக் கழகத்தின் தென் மண்டல நிர்வாக இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ், கூட்டுறவு சங்கப் பதிவாளர் சுப்பையன், தமிழ்நாடு கிடங்குக் கழக மேலாண்மை இயக்குநர் பழனிசாமி, தமிழ்நாடு நுகர்வோர் வர்த்தகக் கழக மேலாண் இயக்குநர் அண்ணாதுரை, மோகன். உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனர் காயத்ரி கிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஒன்றிய கூடுதல் பதிவாளர் காயத்ரி கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.