மதுரை: மத்திய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கும் பல தேர்வுகள் பொங்கல் விடுமுறையில் அறிவிக்கப்படுவது சர்வசாதாரணமாகி விட்டது. கடந்த மாதம் பொங்கல் திருநாளில் அறிவிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் (சிஏ) தேர்வு தேதியை மாற்றக் கோரி போராடினோம். தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பு வந்துள்ளது. தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள “யு.ஜி.சி. – நெட்’ தேர்வு அட்டவணையில், 30 பாடங்களுக்கான தேர்வுகள், ஜனவரி, 15 மற்றும் 16-ல் வருகிறது.
திருவள்ளுவர் தினமான, ஜன., 14-ல், பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை இருந்தபோதிலும், மேற்கண்ட தேதிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 15-ம் தேதியும், உழவர் திருநாள் ஜனவரி 16-ம் தேதியும் நடக்கிறது. பொங்கல் காலம் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் விவசாயிகளின் உணர்வுபூர்வமான கொண்டாட்டத்துடன் தொடர்புடையது.

எனவே, தேர்வர்கள் மற்றும் பெற்றோர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, இந்தத் தேதிகளில் தேர்வுகளை நடத்துவது தமக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று கூறி, எனது தலையீட்டை நாடியுள்ளனர். எனவே, இந்தத் தேர்வு தேதிகளை மாற்றக் கோரி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தேர்வு முகமை இயக்குநர் ஜெனரல் பிரதீப் சிங் கரோலா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார் சு. வெங்கடேசன் எம்.பி.