குமுளி: தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஆய்வு செய்தார். தமிழக அரசின் அனுமதியின்றி இதுபோன்ற ஆய்வுகள் அடிக்கடி நடப்பதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்காக கமிஷன் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய குழு அமைக்கப்பட்டது.
இக்குழு கடந்த மார்ச் 22-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்தது. பின்னர் தேக்கடியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்நிலையில் நேற்று மத்திய நீர்வள ஆணைய தலைவர் முகேஷ் குமார் சின்ஹா அணையை ஆய்வு செய்தார். குழந்தை அணை, மதகுகள், பிரதான அணை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். செயற்பொறியாளர் ரமேஷ், பெரியார் வைகை கண்காணிப்பு பொறியாளர் ஷாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் ராஜகோபால் மற்றும் கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழக விவசாயிகள் கூறுகையில், “தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்து, மத்திய நீர்வள ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அணை வந்துள்ளது. கடந்த மாதம், இக்குழுவினர் ஆய்வு செய்த நிலையில், அதன் அறிக்கை இன்னும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், கட்டுப்பாட்டில் இல்லாத அணையை, நீர்வள ஆணையம் ஆய்வு செய்வது ஏன்? இதை கண்டிக்கிறோம்.
தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த குழுவினர் தேசிய அளவில் ஒவ்வொரு அணையாக ஆய்வு செய்து வருகின்றனர். கேரளாவில் உள்ள இடுக்கி உள்ளிட்ட அணைகளை ஆய்வு செய்துவிட்டு இங்கு வந்தனர்.