சென்னை: தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் சில பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களிலும், 20ஆம் தேதி ஒரு சில இடங்களிலும், 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கும், கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
கோவை மாவட்டம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 8 செ.மீ., நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் தலா 7 செ.மீ., கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தலா 7 செ.மீ., கரூரில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. .
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதியில் அதிகபட்சமாக 55 கி.மீ. சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.