தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஓரிரு தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தமிழகத்தை நோக்கி வீசும் கிழக்குக் காற்றின் வேகத்தில் உள்ள மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும். வரும் 20-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 21 மற்றும் 22-ம் தேதிகளில் வறண்ட வானிலையே நிலவும். வரும் 23-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை மேற்கண்ட மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமூக்கில் தலா 7 செ.மீ., காக்கச்சியில் 5 செ.மீ., மாஞ்சோலையில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.