சென்னை: அந்தமானில் இன்று உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தென் தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்கிறது. இன்று வடமேற்கு திசையில் புயலாக வலுப்பெறலாம். இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக உருவாகலாம்.
வடக்கு ஒடிசா-மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே நாளை இரவு கடுமையான புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. அப்போது அந்த பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ. காற்று பலமாக வீசக்கூடும்.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: தென் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 23, 24 மற்றும் 25 தேதிகளில் மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்கக் கடலில் அதிகபட்சமாக 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.