சென்னை: இந்தியாவின் தென்பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு கிழக்கு மற்றும் மேற்கு காற்று சந்திக்கும் பகுதியில் உள்ளதால், வரும் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் வெப்பச் சலனம் ஏற்பட்டு தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது.
வட தமிழக கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவியது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பை விட அதிகபட்சமாக 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் வெப்பநிலை 104 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. மலைப்பாங்கான பகுதிகளில் குறைந்த வெப்பநிலை நிலவியது.

தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குறைந்துள்ளது. வெப்பத்தை பொறுத்தமட்டில், வேலூர், மதுரை, கரூர், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டங்களில் அதிகபட்சமாக 102 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையில் 100 டிகிரியும், கடலூர், தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூரில் 99 டிகிரியும், நாகப்பட்டினத்தில் 97 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது.
ஒரு சில இடங்களில் வெப்பம் அதிகரித்துள்ளதால், சிலர் பல்வேறு இடங்களில் மயங்கி விழுந்துள்ளனர். எனவே, வெயில் காலங்களில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னிந்தியாவின் வளிமண்டல மேலடுக்கு கிழக்கு மற்றும் மேற்கு காற்று சந்திக்கும் பகுதியில் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியாக இருக்கும். வெப்பநிலையைப் பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்பதால் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.