இதுகுறித்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தமிழகத்தில் நெல்லை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகி உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. தமிழகத்தை நோக்கி வீசும் கிழக்குக் காற்றின் வேகத்தில் நிலவும் மாற்றத்தால், இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. 4, 5, 6 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 7 மற்றும் 8-ம் தேதிகளில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் சில இடங்களிலும், உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகாலை நேரங்களில் லேசான மூடுபனி நிலவும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.