சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நிலத்தடி காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.சென்னையை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 18; அப்பர் பவனியில் 9; விண்ட் வொர்த் எஸ்டேட், பார்வூட் மற்றும் குந்தா பாலம் பகுதிகளில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், அவ்வப்போது மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.