சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 15-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வளிமண்டல கீழ்நோக்கிய சுழற்சி தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதிகளில் நிலவியது, அதே பகுதிகளில் நிலவும். இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடலில் இன்று மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது 2 நாட்களில் தமிழக – இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வரும் 15-ம் தேதி வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் 13-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 14, 15 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, குமரி மாவட்டம் குருந்தன்கோடு, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 13-ம் தேதி வரை மணிக்கு 35-45 கி.மீ. வேகத்தில், இடைவெளியில் மணிக்கு 55 கி.மீ. சூறாவளி காற்றும் அதிக வேகத்தில் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.