
சென்னை: வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் நகரும் வேகம் குறைந்துள்ளதால் நாளை கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நேற்று உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மதியம் அல்லது இரவுக்குள் காரைக்கால் மற்றும் புதுச்சேரி அருகே மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:-

புயல் உருவானதில் இருந்து, அதன் நகரும் வேகம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் அது மிக மெதுவாகவும், சில சமயங்களில் சற்று வேகத்துடனும் நகர்ந்தது. குறிப்பாக புயலுக்கு முந்தைய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் நிலைகொண்டது.
இதனால், புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் அது பின்னர்தான் புயலாக மாறியது. இவ்வாறு மாறியுள்ள ஃபெஞ்சல் புயலின் நிலையை கணிப்பதில் துல்லியம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.